Labels

ஒரே நாள் உன்னை நான்

 




முன்னுரை

என் மனதில் தோன்றிய ஒரு ஒற்றை வரி காதல் கவிதையை கதையாக்க முயன்று உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

கார்த்திக் என்ற வனஉயிரினப் புகைப்படவியலாளர் தான் ஒரே ஒரு முறை கண்டு காதல் வயப்பட்ட வள்ளி என்னும் பெண்ணைத் தேடித் கொண்டிருக்க அவர் மேல் காதல் வயப்படுகிறாள் பவித்ரா என்னும் நடிகை. மற்றொரு புறம் ஜெயா என்னும் மாவட்ட ஆட்சியர் தன் பெண் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறாள்.

கார்த்திக்கும் ஜெயாவுக்கும் என்ன சம்பந்தம்? பவித்ராவின் காதல் வென்றதா? கார்த்திக் தான் தேடித் திரிந்த பெண்ணைக் கண்டுக்கொண்டானா? இப்படி பலவித கேள்விகளுக்கு பரபரப்பான விதத்தில் சுவாரஸ்யம் குறையாத பதில் தான் இந்த கதை.

உங்களுக்கு காடும், காதலும் பிடிக்குமென்றால் இந்த கதையும் பிடிக்கும்.

கார்த்திக், ரமணி, ஐய்யப்பன், ரம்யா, ஜெயா போன்ற பல பெயர்கள் என் சொந்த வாழ்க்கையோடுத் தொடர்புடையவை. ஆனால் இந்த கதையோடு எவ்வித தொடர்பும் அற்றவை.

இக்கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும், பெயர்களும் கற்பனையே. யாரையும் எதனையும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல. அப்படி யாரையேனும் எதையேனும் இக்கதையில் குறிப்படும்படி இருந்தால் அது முழுக்க முழுக்க எதேச்சையானதே.

இன்று என்னால் தமிழில் கதை, கவிதை, தொடர்கதைகள்  எழுதும் அளவுக்கு திறன் இருக்கிறதென்றால் அதற்கு முதன்முழுக் காரணம் தமிழ் மீது என்னிடம் இவ்வளவு காதலை ஏற்படுத்திய, எனது மதிப்பிற்குரிய 8ம் வகுப்பு ஆசிரியை திருமதி ரோசலின் லுபினா மேரி அவர்களே. இந்த நேரத்தில் அவர்களுக்கு என் நன்றியை சமர்ப்பிக்கிறேன். ஒரு புத்தகத்தில் நிறைவடைகிற நன்றி அல்ல அது. என் அத்துனைப் படைப்புகளிலும் அது தொடரும்.

-    நா. கார்த்திக் மணி

 படங்கள்: K. பூஜா ஸ்ரீ

 


 

1

இன்று

பெங்களூரூ 2021.

பெங்களூரூவில் இருந்த அந்த அரங்கம் அப்படியொரு அமைதியை இதுவரை கண்டதில்லை. எல்லோர் கவனமும் திரையில் விரிந்திருக்கும் அந்த புகைப்படத்திலேயே லயித்திருந்தது.

ஒரு புலி நாலு கால் பாய்ச்சலில் முகம் முழுக்க வியாபிக்கும் வெறியோடு காண்போரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது அதில்.

என்னவாக இருக்கும் அந்த புலியின் முன்?!.

மான்? காட்டெருமை? இல்லை மனிதனேவா?! எப்படி எடுக்க முடிந்தது இப்படி ஒரு புகைப்படத்தை? - பார்வையாளர்களை இவ்விதம் பல கேள்விகள் பந்தாடிக் கொண்டிருந்தன.

கூட்டத்தில் எங்கோ ஒரு ரசிகர் தன்னை மீறீன உணர்ச்சி பெருக்கால் கைத்தட்ட துவங்க அது அப்படியே அடைமழையாய் மாறி அந்த அரங்கையே கைத்தட்டல்கள் நனைக்க துவங்கின.

புலியின் புகைப்படத்தின் அருகிலேயே இப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனின் புகைப்படமும் ஒளிரத் தொடங்கியது. கைத்தட்டல்களின் ஊடே ஒரு உருவம் மேடையில் ஏறத் தொடங்கியது. சிற்சில வித்தியாசங்களுடன் அந்த உருவம் திரையில் தெரிந்த புகைப்பட இளைஞனை ஒத்திருந்தது. கார்த்திக்-வன உயிரின புகைப்படவியலாளர் என்ற வரிகள் இப்போது அந்த திரையில் தோன்றலாயின.

மேடையில் நின்ற அந்த இளைஞனுக்கு வயது சுமார் 35 இருக்கும். (அப்போ இளைஞன்-னு சொல்றதா? இல்ல நடுத்தர வயது-ன்னா? சரி விடுங்க. நம்ம ஹீரோ-ல இவரு. இளைஞன்-னே சொல்லுவோம்!) 6 அடி உயரத்தோடு ஆஜானுபாகுவாய் ஜீன்ஸ், டீசர்ட்டில் நிற்கும் அவனிடம் ஆண்மை நிறைந்திருந்தது. டீசர்ட்டில் வனம் காப்போம் என்ற வாக்கியம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதன் மேற்புறத்தில் ஒரு யானையின் உருவம் அச்சிடப்பட்டு இருந்தது. முகம் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தாலும் அகம் முழுக்க ஏதோ ஒரு சோகம் ஒளிந்திருந்தது.

மேடையில் கார்த்திக்குடன் இப்போது மூவர் சேர்ந்து கொண்டனர். மூவரும் ஒருவர் பின் ஒருவராக கார்த்திக்கைப் புகழத் தொடங்க, கார்த்திக் எடுத்த வேறு சில புகைப்படங்களும் இப்பொழுது ஒன்றன் பின் ஒன்றாக திரையில் விரிய துவங்கியது.

யானையை வேட்டையாடும் பாணியில் நின்று முறைக்கும் செந்நாய்!

ஓங்கி வளர்ந்த மரங்களுக்கு நடுவே அந்திரத்தில் பறப்பது போல இருந்த அணில்!

கொஞ்சிக் கொண்டிருந்த இரு பூச்சிப்பிடிப்பான் தம்பதியர்!

-இப்படி வெகு ரசனையோடு எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையைக் கூறுவதுப் போல் இருந்தது.

மூவரில் மூன்றாமவரான இயற்கை ஆர்வலர் தனசேகரன் இப்போது பேசத் துவங்கினார்.

இன்றைக்கு பெரும்பாலான அரிய வன உயிரினங்கள் அருகி விட்டன. யானையின் வழித்தடங்களை ரிசார்ட்டாகவும், மத வழிபாடுத் தலங்களாகவும் மாற்றிவிட்டோம். நீருக்காகவும், உணவுக்காகவும், வழிமாறியும் வரும் பல்லுயிர்களும் பேருயிர்களும் மனிதனாலும், பிற்போக்கு அரசியல் கட்டமைப்பு கொண்ட அரசினாலும் தொடர்ந்து அழிக்கப் படுகின்றன.

இப்படி ஒரு காலக்கட்டத்தில் வன உயிரினங்களைப் பற்றியும் அதன் பாதுகாப்பைப் பற்றியும்  தம் புகைப்படங்களாலும் கட்டுரைகளாலும் தொடர்ந்து விழிப்புணர்வை கொடுத்துக் கொண்டிருக்கும் கார்த்திக் போன்றோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

அதிலும் தம்பி கார்த்திக் எடுத்த இந்த புகைப்படங்கள் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தின. அதிலும் அந்த புலியின் படம், அதில் ஒரு உயிருள்ள புலியின் உறுமலை என்னால் உணர முடிகிறது.

பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இப்படியொரு அறிய புகைப்படத்தை எடுத்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா கார்த்திக்? - என்றவர் மைக்கை தன்வசம் இருந்து கார்த்திக்கின் கைக்கு மாற்றினார்.

புன்னகையுடன் அதைப் பெற்றுக்கொண்டான் கார்த்திக்.

அந்த அனுபவம், வள்ளி என் வாழ்க்கையில் வந்த அந்த தருணத்தை எப்படி நான் மறப்பேன்?

மனதில் ஏதோ யோசித்தவனாய் கார்த்திக் தனது அனுபவத்தை சொல்லத் துவங்க அரங்கமே ஆர்வமும் அதிர்ச்சியும் கலந்த அமைதியில் உறையத்தொடங்கியது.

 

  அன்று

வனசரகர் அலுவலகம், அம்புலி காடு - 2011

அட ஏன் சார், நீங்க வேற. ஒரு வாரமா வெயிட் பண்றோம். இன்னும் எதாச்சும் சாக்கு போக்கு சொல்றீங்களே. எப்போதான் பெர்மிஸன் கிடைக்கும்?”

பாரெஸ்ட் ஆபீசரிடம் வாக்குவாதம் செய்துக்கொண்டு இருந்தனர் 25 இளவயது கார்த்திக்கும், அவனது நண்பன் ரமணியும்.

கார்த்திக் ஒரு காக்கி பேன்ட்-வெள்ளை டிஷர்ட் அணிந்திருக்க, ரமணி ஒரு கருப்பு நிற சட்டையும் காவி நிறத்தில் தளர்வான காட்டன் பேன்ட்டும் அணிந்திருந்தான். ரமணிக்கும் ஏறக்குறைய கார்த்திக் வயதிருக்கும். முகத்த்தில் மூன்று நான்கு நாட்களின் தாடி முளைத்திருந்தது.

சார், உங்க அவசரத்துக்கெல்லாம் நாங்க கிடையாது. ஒரு புலி வேற போன வாரம் காட்டுக்குள்ள மிஸ் ஆகிடுச்சு. அதோட ஜி.பி.எஸ் தொடர்பு வேற வொர்க் ஆகல. அதை கண்டுபிடிக்காம யாரையும் ட்ரெக்கிங்-க்கு அலோ பண்ண கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா ஆர்டர். தயவு பண்ணி புரிஞ்சுக்கோங்க. கிளம்புங்க. அடுத்த மாசம் நானே கால் பண்றேன்.

கெஞ்சாத குறையாக பேசிய வனத்துறை அதிகாரியிடம் மேற்கொண்டு பேசி பலனேதும் இருக்கப்போவதாய் ரமணிக்கும் கார்த்திக்கும் தோணவில்லை. பதில் ஏதும் பேசாமல் அவரை முறைத்தபடியே வெளியே வந்தனர் இருவரும்.

அவர்கள் வெளியே வரவும் இரு பழங்குடி பெண்கள் அவ்வழியே கடப்பதற்கும் சரியாக இருந்தது. மூத்தவள் திருமணக் கோலத்திலும் இளையவள் பழங்குடி உடுப்பிலும் ஏதோ சுவாரசியமாகப் பேசியபடி சென்றனர். யாரோ செல்வதை உள்ளிருந்து தலைத்தூக்கி கவனித்த வனசரகர் வேகமாக வெளியே வந்து வாசற்படியில் நின்றபடியே அவர்களைப் பார்த்து கூவினார்.

யாரது?

இளையவள் திரும்பினாள். வனசரகர்க்கு தெரிந்த முகம் போல.

அவர்களை கண்டதும் இயல்பானவர்,

நீயாமா? சரி சரி.. எங்கே டவுனுக்கா

ஆமாம் - என்று புன்னகைத்தவள் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் “வரேன்னே” என்றவாறு நடையைத் தொடர்ந்தாள்.

அவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ரமணி, கார்த்திக்கிடம் வந்தான்.

நீ ஏன் தல, அவர்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க. என் பிரன்ட் ஐயப்பன்-னு ஒருத்தரு இந்த வனத்துறையில பெரிய போஸ்ட்-ல இருக்காப்ல. அவர்கிட்ட கேக்குறேன். கண்டிப்பா நமக்கு ஹெல்ப் பண்ணுவாரு.

ரமணியின் அனுசரணை வார்த்தைகள் ஒருபுறம் கேட்க. தூரத்தில் எங்கோ கேட்ட ஒரு இருவாட்சி பறவையின் ஒலிக்கு செவிமடுத்தபடி அம்புலி காட்டையே உற்று நோக்கியபடி இருந்தான் கார்த்திக்.

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைத்திருந்த அசாதாரமான மலைக்காடு அது. வருடம் முழுதும் பெய்யும் மழையும், மிதமாக நிலவும் தட்பவெப்பமும் அந்த மலையையும், சுற்றியுள்ள காட்டையும் பச்சைப்பசேல் என்று வைத்திருந்தது. தூரத்தில் நிறைய பறவைகளின் கூச்சலும், அதன் ஊடே புலியின் உறுமலா இல்லை செந்நாயின் குறைப்பா என்று அறியாவண்ணம் ஒரு சப்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.

இல்லடா ரமணி இந்த வருஷம் நடக்கிற இன்டர்நேஷனல் போட்டோ கேலரி காம்படிசன்-ல அருகி வரும் உயிரினங்களைதான் தலைப்பா கொடுத்து இருக்காங்க. கடந்த 3 வருஷமா நானும் எவ்ளோவோ கஷ்டப்பட்டு எல்லாத்தையும் புகைப்படமா எடுத்திருக்கேன். ஆனா எதுவுமே செலக்ட் ஆகல. இந்த வருஷமும் அப்படி ஆனா, ‘இந்த துறையே எனக்கு சரி வராதுன்னு எங்க வீட்டுலயே சொல்ற மாதிரிநானே நினைக்க ஆரம்பிச்சுடுவேன். ரொம்ப கஷ்டமா இருக்குடா

விடு தல பாத்துக்கலாம்.” என்றவாறு ஏதோ யோசித்தவன் சட்டென ஒரு முடிவுக்கு வந்தான். 

“இவன் என்ன நமக்கு பெர்மிஸன் தரது?. நாம இன்னைக்கு காட்டுக்குள்ள போறோம். புலிய போட்டோ எடுக்கிறோம். ஓகேவா?”

ரமணியின் அசாத்திய துணிச்சல் கார்த்திக்கை திகைப்புறச் செய்தது.

எப்படிடா ரமணி, அதான் அந்த ஆபீசர் ஒத்துக்கவே மாட்ரானே. அப்புறம் எப்படி?!.. என்னடா பண்ணப் போற?!

அவன் ஒத்துக்கவே வேண்டாம். நாம அவனுக்குத் தெரியாம காட்டுக்குள்ளப் போவோம்.

டேய்ய்ய்ய்.... லூசாடா நீ? மாட்டிகிட்டா பைன்-டா! உள்ள கூட வைக்கலாம்.

எது வேணா நடக்கட்டும். இது உன்னோட கனவா இல்லையா? உன் எதிர்காலத்துக்காக இவ்ளோகூட ரிஸ்க் எடுக்க மாட்டியா? – ரமணியின் கேள்வி கார்த்திகை சற்றே யோசிக்க வைக்கிறது.

யாரோ ஐயப்பன்-னு சொன்னியே, உன் பிரண்ட்., அவர்கிட்ட கேட்டு பார்க்கலாமா?

எவனும் வேண்டாம். நான் பாத்துக்கிறேன் வா.                                          

அதற்கு மேல் கார்த்திக்கால் ரமணிக்கு மௌனத்தையே பதிலாக்க முடிந்தது.

நைட் போலாம்” – என்ற ரமணியை தலையசைத்து ஆமோதித்தான் கார்த்திக்.

அதே நேரம் தூரத்தில் அந்த காட்டின் எங்கோ ஒரு மூலையில் ஒரு புலி உறுமும் சத்தம் மெலிதாகக் கேட்கத் தொடங்கியது.

 


2

இன்று

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி

புதிய ஆட்சியரின் வருகைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிரிந்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில மேடம் வந்துடுவாங்க. எல்லாரும் ரெடியா இருங்கசொல்லிக்கொண்டே ரம்யா எனும் அந்த ஆட்சியரின் காரியதரிசி வேர்வைத் துளிகள் முகமெங்கும் வியாபிக்க காற்றாய் சுழன்றுக் கொண்டிருந்தாள். ஒடிசலான தேகத்தோடு இருந்தாலும் பெண்மைக்குரிய அவயங்கள் அதன் வளர்ச்சியைக் கூடுதலாகவேப் பெற்று இருந்தன. இளஞ்சிவப்பு சுடிதாரில் சற்று கூடுதல் அழகோடு மிளிர்ந்தாள்.

கையில் ஏதோ இத்யாதிகளோடு அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்தவள், உள்ளே வெள்ளை ஜிப்பா மூக்குக்கண்ணாடி சகிதம் நுழைபவனைப் பார்த்துக் கேட்டாள்.

என்ன கதிரேசன், இன்னைக்கும் கூடவா லேட்டா வரணும்?”

உள்ளே நுழைந்துக் கொண்டிருந்த அந்த 45 வயது ஆசாமிக்கு வாயெல்லாம் பல்லானது.

அதுல வந்து பாருங்க மேடம். இன்னிக்குனு பார்த்து.....

கதிரேசன் சார், போதும் போதும் நிப்பாட்டுங்க உங்க ராமாயணத்தை. டெய்லியும் எதாச்சும் சாக்குப் போக்கா? புது கலெக்டர் வராங்க. ஒழுங்கா நடந்துக்கங்க!” – சற்றே சலித்துக்கொண்டவள் வாசலை நோக்கி செல்வதற்கும் அந்த இன்னோவா கார் ஆட்சியர் வளாகம் நுழைந்து வாசலில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

மேடம் வந்துட்டாங்க, வாங்க சீக்கிரம்

உள்நோக்கி கத்தினாள். ஒரு கூட்டமே அதை எதிர்பார்த்ததைப் போல் உடனே வாசலுக்கு விரைந்தது.

காரை விட்டு அவசரகதியாக இறங்கிய டிரைவர் மறுபக்கம் சென்று காரின் கதவை திறக்க அதில் இருந்து இறங்கிய அவளுக்கு 30 வயதிருந்தால் அதிகம். வயதிற்கே உரிய வாளிப்போடு காட்டன் புடவையில் சற்று விறைப்பாகத் தெரிந்தாள். கண்ணில் கொஞ்சம் ஒடிசலான மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தாள். ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அழகு அவளோடு ஒட்டியிருந்தது.

ரம்யா முந்திக்கொண்டு அவள் அருகில் சென்றாள்.

வெல்கம் மேடம், நான்தான் உங்க அசிஸ்டன்ட். நேம் ரம்யா

பதிலுக்குப் புன்னகைத்தவள் சிறிது வினாடிகள் விட்டு,

தேங்க்ஸ். நைஸ் டூ மீட் யூ” – என்றாள்.

ஒவ்வொருவரின் கைமாலையும் இப்போது அவளின் கைக்கு மாறி பின் அவளது டிரைவரின் கைக்கு மாறியது. பல வித நன்றிகள், சில பல புன்னகைகளுக்குப் பிறகு அவளது தனியறையினுள் நுழைந்தாள்.

புது மனைவியாய் மெருகேறி இருந்தது அந்த அறை. பளீர் சுவர். சுத்தமான தரைவிரிப்பு, ஜன்னல்களுக்கு புது தடுப்பு, ஒழுக்கமாய் ஒழுங்காய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவள் மேஜை பொருள்கள். அதற்கு நடுநாயகமாய் அவளின் பெயர் பொறித்த பலகை.

திருமதி. ஜெயா ராமசாமி, ஆட்சியர்’.

அப்பா ஆசைப்பட்டது இதுக்குதான்-ல. அவரும் இருந்திருந்தா இந்த நாள் இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.அவளின் எண்ண அலைகள் சொல்லாமல் கொள்ளாமல் சேலத்தில் இருந்த அவளது வீடு வரை பயணப்பட்டுக் கொண்டு இருந்தது.

 

சேலம் (10 வருடங்களுக்கு முன்பு)                    

நீ படிச்சதெல்லாம் போதும் ஜெயா. உன்ன கலெக்டர் ஆக்கி பாக்கனும்னு நானும்தான் ஆசைப்படறேன். ஆனா நீ அதுக்கு ஏத்த மாதிரியா நடந்துக்கிற? – உன்னால இன்னைக்கு ஸ்டேஷன்-ல என் மானமே போச்சு.

உனக்கு ஒரு தடவ சொன்னா தெரியாதா? எதற்கு தேவையில்லாம அந்த ஆதிவாசி பொண்ணுக்கு உபகாரம் பண்ணப் போய் இப்படி உன் பெயரை கெடுத்துக்கிற?. இப்போ பார் உன்னையும் என்னமோ நக்சலைட் மாதிரி பாக்கிறாங்க.

அந்த இன்ஸ்பெக்டர் சொன்னது நினைவில இருக்கா?

இன்னொரு வாட்டி உண்ண அந்த பொண்ணோட பார்த்தேன். FIR புக் பண்ணி உள்ள தூக்கி வச்சுடுவேன். அப்புறம் கலெக்டர் இல்ல கம்பௌண்டர் கூட ஆக முடியாது. புரியுதா? – மீசை தெறிக்க அந்த சிடுமூஞ்சி இன்ஸ்பெக்டர் கத்தியது அவளுக்கும் நினைவில் வந்து போனது.

எல்லாம் புரியுதுப்பா. ஆனா என்ன பண்றது? என்னால மத்தவங்களுக்கு உதவாம இருக்க முடியலையே. எங்க அப்பா வளர்ப்பு அப்படி!” - அப்பாவியாக பதில் சொன்ன மகளைப் பார்த்து குபீர் சிரிப்பு வந்தது சிவகாமிக்கு.

இப்போ நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். ரெண்டு பெரும் சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க?” – ராமசாமியின் கோபம் இப்போது சிவகாமி பக்கம் திரும்பியது.

அட விடுங்க. அவ சின்ன பொண்ணு. சொன்னா புரிஞ்சுக்க போறா. அதை விட்டுட்டு இப்படி லபோ திபோனு கத்துனா புரிஞ்சுடுமா?

ஏண்டி அவளுக்கு தான் புரியல. உனக்கு கூடவா? இப்படியே இவ பண்ணிகிட்டிருந்தா நாளைக்கு அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சி-னு நம்மால செஞ்சு பார்க்க முடியுமா? இல்ல அவ ஆசைப்படுற மாதிரி கலெக்டராதான் ஆக முடியுமா?

அப்பா எனக்காக ரெண்டு பெரும் அடிச்சுக்காதீங்க. எனக்கு புரியும், புரியுது. சாமந்தி என் தங்கை மாதிரிப்பா. உங்கப் பொண்ணு இத்தனை தடவைக் காட்டுக்குள்ள போய்ட்டு பத்திரமா திரும்பி வரானா அதுக்கு அவதானேப்பா காரணம். அவளுக்கு ஒன்னுன்னா நான் எப்படியப்பா அலட்சியமா இருக்க முடியும்?. சரி,  இந்த பிரச்சினையை இதோட விடுங்க, நான் இனிமே எந்தப் பிரச்சினைக்கும் போக மாட்டேன். போதுமா?. ஒட்டு மொத்தமாய் முற்றுப்புள்ளி வைத்தாள் ஜெயா.

ஏதோ NCC கேம்ப்-லப் பார்த்தப் பொண்ணுன்னு பர்ஸ்ட் சொன்ன. இப்ப என்னன்னா அவகூடவே காட்டுக் குள்ளையேச் சுத்திக்கிட்டுயிருக்க. எனக்கென்னமோ நீ திருந்தற மாதிரி தெரியல. உன் மாமனுக்கு லெட்டர் போட்டு இருக்கேன். அவன்கிட்ட பேசி உனக்கும் அவன் பையனுக்கும் அடுத்த மூகூர்த்தத்திலேயே கல்யாணம் செஞ்சாதான் எனக்கு நிம்மதி.  

ராமசாமி இப்படி திடீரென்று இப்படி ஒரு குண்டை போடுவார் என்று எதிர்பாராத இருவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இனிமேல் கலெக்டர் ஆகுதல் வெறும் கனவுதானா? – ஜெயாவின் பஞ்சு நெஞ்சு சற்றே கனக்கத் தொடங்கியது.

மே ஐ கம் இன் மேடம்? ரம்யாவின் குரலால் பழைய நினைவு கலைந்தவள் எஸ். கம் இன்என்றாள்.

வா ரம்யா அவளது பேச்சில் ஒரு தன்மை இருந்தது. அது ரம்யாவுக்கும் பிடித்திருந்தது.

ஆபீஸ்-லாம் கம்போர்ட்-ஆ இருக்கா மேடம்? எல்லாம் என் ஏற்பாடு தான்.

ஹ்ம்ம் - என்றவாறு மெலிதாக புன்னகைத்தாள் ஜெயா.

தப்பா எடுத்துக்காதீங்க மேடம். ரெண்டு வாரமா நிறைய முக்கியமான தஸ்தாவேஜுகள்-லாம் கலெக்டர் இல்லாம முடிக்கப்படாம இருக்கு. கொண்டு வரவா மேடம்?.

சரி கொண்டு வாங்க. இதுக்கு எதுக்கு தப்பா எடுத்துக்க போறேன்?/

அப்படியில்ல மேடம். இன்னைக்கு தான் வந்தீங்க. அதுனாலதான்.

என்ன ரம்யா இது. வேலை செய்யத்தானே என்னை அனுப்பி இருக்காங்க?!. போய் கொண்டு வாங்க, போங்க.

எஸ் மேடம். என்றபடி நகர்பவள் துள்ளி ஓடும் புள்ளி மானாய் தெரிந்தாள்.

எப்போதும் வனங்களையும் மிருகங்களையும் ரசித்து ரசித்து இப்போது பெண் ஒருத்தியையும் புள்ளி மானாய் கற்பனை செய்துகொண்டதை நினைத்து தன்னையும் அறியாமல் உள்ளூரச் சிரித்துக் கொண்டாள் ஜெயா.  

தொடர்ந்துப் படிக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

 

Popular Posts