Labels

உண்டியல் காசு


undiyal kaasu

அடச்சே, ஒரு 5௦௦௦ காசைப் பத்திரமா வச்சுக்க முடில. நீங்கலாம் எதுக்கு ஒரு ஆம்பலைன்னு.

சரோ... நான் என்ன பண்ணுவேன்? அந்த பாலாய்ப் போன பல்லவன் பஸ்ஸில வந்த எந்த நாயோ நம்ம காச இப்படி தூக்கிட்டுப் போகும்னு.


இதுவரைக்கும் ஒரு வேலையைவாச்சும் உருப்படியா செஞ்சு இருக்கீங்களா?. உங்கள நான் கட்டிகிட்டதுக்கு பேசாம உங்க அப்பா மாதிரியே சாமியாரா போயிருக்கலாம். அடச்சே இப்படி கஷ்டப்பட்டு கிடச்ச காசு ஒண்ணுமில்லாம போயிருச்சே!!

விடு சரோ, அந்த காசு நமக்குன்னு இருந்தா நம்மகிட்ட வந்தே சேரும். நீ எதற்கும் கவலைபடாத.

உங்க கையாளாகாதனத்துக்கு இப்படியொரு ஜால்சாப்பா.. போங்க எங்கயாச்சும். உங்கள பார்க்கப் பார்க்க அப்படியே ஆத்திரமா வருது.

மனைவியை சமாதானப்படுத்த முயன்று தோற்றவனாய் மாதவன் அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல்; சாரி முடியாமல் கோவிலை நோக்கி நடையைக் கட்டினான்.

வழியெங்கும் தனக்கே தன்மேல் எரிச்சலாக வந்தது. வராதா பின்ன? சரோ திட்டுறதும் கரெக்ட்தான். எனக்குத்தான் பொறுப்பே இல்ல. காசு விசயத்தில கொஞ்சம் சூதானமா இருந்திருக்கணும். அந்த காசு எடுத்த படுபாவி மட்டும் இப்போ கையில கிடைச்சான்...அவன......

நினைக்கும்போதே அப்படியே ஆத்திரம் ஆத்திரமா வந்தது மாதவனுக்கு.
கோவில் பிரகாரத்திலேயே இரவு வரைக்கும் ஏதோ யோசித்தவனாக அமர்ந்திருந்தவன் இரவு நடை சாத்தும் பொழுதே திரும்பலானான். 

வந்தவன் வாசலில் அயர்ச்சியாக அமர்ந்திருந்த சரோ-வைப் பார்த்தான்.
என்ன சரோ, இன்னும் அதையே நினைச்சுக்கிட்டு இருக்கீயா? - என்று வெந்த புண்ணில் வேலைப் பாச்சினான்.

அவனை முறைத்தவள் எழுந்து உள்ளேச் சென்றாள். அவள் பின்னாடியே அவனும் வீட்டிற்குள் நுழைந்தான். உள்ளிருந்து அவன் அம்மாவின் குரல் கேட்டது மருமகளை நோக்கி.

சரோசா... மாதவன் வந்துட்டானா?.

வந்துட்டாரு அத்த.

ஏன்டா இவ்ளோ நேரம். உங்க ஆபீஸில வேலசெய்ற சீனி-லாம் எப்பவோ வந்துட்டான். நீ என்னத்தடா அந்த ஆபீஸிக்கு ஒலச்சுக் கொட்ற. சீக்கிரம் சாப்டு தூங்குடா.

சரிம்மா.

ரொம்ப முக்கியம். உருப்படியா ஒருவேலையைச் செய்யத் துப்பு இல்ல.

என்ன சரோ, காலையில இருந்து என்ன இப்படி கரிச்சிக் கொட்டிகிட்டே இருக்கே. நான் மட்டுமா எடுத்துட்டு போனேன்? நீயும் தானே என்கூட வந்த. ஏன் என்ன மட்டும் ப்ளேம் பண்ற?

பண்ணாம? நகைக்கடைக்கும் போய் எனக்குப் பிடிச்ச டிசைனையும் செலக்ட் பண்ணியாச்சு. கரெக்ட்டா பில் கட்டும்போதா சொல்லுவீங்க பணம் மிஸ்ஸிங்னு. எனக்கு எவ்ளோ அசிங்கமா போச்சு...

இருவரின் உரையாடலையும் தன் குரலால் ஊடுருவிக் கொண்டே அந்த அறைக்குள் தள்ளாடியபடி நுழைகிறது அவன் அம்மாவின் நிழல்.

மாதவா....

என்னம்மா?

காலையிலிருந்து உன்னையும் சரோசவையும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். ஏதோ பிரச்சனை போல... குசுகுசுன்னு பேசுறீங்க. ஆனா என்கிட்டேதான் சொல்லவே மாட்றீங்க. என்னடா விஷயம்?

அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்த. அவருக்கு ஆபீஸில ஏதோ டென்ஷன். அதான் அவரு மூட் அவுட். – மாமியாரின் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறாள் மருமகள் சரோ என்னும் சரோஜா என்னும் சரோசா...

ஆமாமா – ஆமோதிக்கிறான் மாதவன்.

இல்லடா மாதவன், நான் ஏன் கேக்கறேனா?! எதாச்சும் பணப்பிரச்சினைனா சொல்லு. காசிக்கு போறதுக்கு சேர்த்து வச்சிருக்கேன்ல உண்டியல் காசு, அத வேணும்னா எடுத்துக்குடா.

மாதவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. சரோவும் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.

கொஞ்சம் சமாளித்துக் கொண்டு –
-    அதெல்லாம் ஒண்ணுமில்லமா.. நீ போய் படுத்துக்கோ.

அம்மா என்ற அந்த நிழல் முழுதும் மறையும்வரை காத்திருந்த மாதவனும் சரோவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

வேறென்ன செய்ய...?! நெக்லஸ் வாங்க சபலப்பட்டு நேத்தேதான் உடைச்சாச்சே அந்த காசு உண்டியல சாரி காசி உண்டியல.

No comments:

Post a Comment

 

Popular Posts