Labels

நான்கு சக்கரமும் ஆறு கால்களும்


தலைப்பை பார்த்தவுடன் இது எதோ சயின்ஸ் சம்பத்தப்பட்ட கதையோ அல்லது  விசித்திரமான திகில் கதையோ என்றெண்ணி உங்கள்  ஆவலைக் கூட்டிக்கொள்ள  வேண்டாம்! இது எனது (சொல்லப்போனால் எங்களது) ஊர்  சுற்றிய அனுபவங்களின்  தொகுப்பில் உளவியல் ரீதியான ஒரு பதிவு!.கதைவடிவில்!!


நான் என் வழியாகவே இந்த கதையை கூறுகிறேன். எவ்ளோவோ சுகங்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனுபவித்தாலும் இந்த இயற்கை இருக்கிறதே அதை என்னவென்று சொல்ல! என் வகையில் நான் ஒரு உல்லாச விரும்பி!.

வால்பாறை  - இந்த பெயரை மறந்தும் என்முன் உச்சரிக்க வேண்டாம். நீங்கள் கூறிய அடுத்த நொடி உங்கள் முன் நிற்பது  சத்தியமாக என் உடலாக மட்டுமே இருக்கும். என் நினைவுகளும் ஆத்மாவும் வால்பாறையின் நினைவுகளுக்குள் ஓடி ஒளிந்திருக்கும். இந்த பயணம் மூன்றாவது முறை வால்பாறைக்கு போனது  என்றாலும்  இன்னும் இன்னும் அங்கு என்னை அழைத்துக் கொண்டே இருப்பது அந்த  மலையின் காற்றும் மாசில்லா காடுகளுமே.

இம்முறையும்  வழக்கமான எனது இரண்டு குழு நண்பர்களைக் கூட்டி செல்ல முடிவு செய்து அவர்களை அழைத்து திட்டமிட்டோம். ஒருவர் சுற்றுலா விரும்பி மற்றொருவர் இயற்கை ஏங்கி.  வழக்கமான ஒரு சுற்றுலாவாக இது இருந்து விட கூடாது என்பதற்காக இம்முறை இரு சக்கர வாகனங்களில்  செல்வதாக முடிவெடுக்கப் பட்டது. அதற்காக கோவை சென்று அங்கு வாகனங்களை வாடகைக்குப் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம், இரண்டு இரு சக்கர  வாகனங்களில்  மூவரும்.

அதிகாலை சென்றால் எதாவது வனவிலங்குகளை காணலாம் என்று எங்களது முந்தைய பயணங்கள் ஆசை காட்டிருப்பதால்  இரவோடு இரவாக எங்கள் பயணத்தை துவங்கினோம்.


சுற்றுலா விரும்பியும்  இயற்கை ஏங்கியும் ஒரு வாகனத்திலும். நான் மறு வாகனத்திலும்.பயணப்பட்டோம். கோவையிலிருந்து பொள்ளாச்சி சென்று அங்கிருந்து ஆழியார் அணையில் ஓய்வெடுத்து வால்பாறைக்கு செல்வதாக அமைந்திருந்து எங்கள் பயணத் திட்டம்.

நான் இரு சக்கர வாகனத்தில் அதிக தூரம் பயணிப்பது இதுவே முதல் முறை என்பதால் மிகவும் ரசித்தவாறே வாகனத்தை சராசரி வேகத்தில்
செலுத்தினேன். சுற்றுலா விரும்பியும் கிட்டத்தட்ட என்னுடனே அவரது வாகனத்தில் தொடர்ந்தார்.  இடையில் கொஞ்சம் இளைப்பாறலாம் என்றெண்ணி ஒரு தேநீர் கடையில் வாகனத்துக்கு சிறிய ஓய்வு கொடுத்தோம். அந்த கடையின் உபசரிப்பாளரிடம்  பேசிய போதுதான் நங்கள் வழிமாறி 20கிலோமீட்டர் வந்துவிட்டது தெரிந்தது. கூகிள் மேப் அப்பொழுதும்கூட அந்த வழியை சரி என்றே தொடர்ந்தது மற்றுமொரு காமெடி.

பிறகு அவ்வழியே சென்ற லாரி ஒன்றில் விசாரித்து சரியான வழியில் புறப்பட்டோம். சிறிது நேரத்தில் ஆழியார் அணையின் சற்றுமுன் அமைந்திருக்கும் பெட்ரோல் பங்க்கை அடைந்தோம். மணி சரியாக 1.30 அளவில் இருந்தது. சிறிது தூங்கி விட்டு செல்லலாம் என்றெண்ணி அயர ஆரம்பித்தோம் நானும் இயற்கை ஏங்கியும். சுற்றுலா விரும்பி எப்பொழுதுமே வேறு ஒரு கோணத்தில் அனைத்தையும் அணுகுபவர். அவர் மட்டும் விழித்திருந்து எதையோ யோசித்துக் கொண்டே இருந்தார். சரி அதுவும் நமக்கு நல்லது தானே ஒரு பாதுகாப்பாய் இருக்கிறாரே என்றெண்ணி நாங்கள் கண் ணயர்ந்து விட்டோம். பிறகு என்ன யோசித்தரோ தெரியவில்லை சரியாக 3 மணி அளவில் அயர்ந்து தூங்கிய எங்கள் இருவரையும் எழுப்பி புறப்படலாம் என்றார். அவரிடம் விவாதிக்கும் மனப்பக்குவம் எங்கள் இருவரிடமும் இல்லாததால் நாங்களும் புறப்பட்டோம்.

சரியான குளிர். மலைப்பாதையின் வளைவுகள் என்று ஒரு விதமான வர்ணிக்க முடியாத அனுபவத்தோடு கரடி டீ கடை என்று எங்களால் அடையாளம் காணப்பட்ட ஒரு தேநீர் கடைக்கு வாகனத்தை செலுத்தினோம். அங்கு கடை மூடியிருக்கவே சிறிது நேரம் அங்கு காத்திருக்கத் தொடங்கினோம். அயர்ந்து தூங்கிய எங்களை எழுப்பிய சுற்றுலா விரும்பி அங்கு அயர்ந்து தூங்கத்தொடங்கினார்!!



அயர்ந்து தூங்க தொடங்கிய சுற்றுலா விரும்பியை  இயற்கை ஏங்கி காலால் உதைத்து எழுப்ப முயற்சித்தார். அப்போதுதான் தெரிந்தது பாவம் அவரை ஏத்துன்னை வெறுப்பில் சுற்றுலா விரும்பி ஆட்படுத்தி எழுப்பி வந்திருக்க வேண்டும் என்பது. இயற்கை ஏங்கியின் முயற்சியும் வெற்றியடைய துவங்கியது. சுற்றுலா விரும்பி எழுந்து கொண்டார். அடிக்கடி எங்களுக்குள் எவ்வளவுதான் வெறுப்பேத்தி கொண்டாலும் ஊர் சுற்றும்,  இயற்கையை ரசிக்கும் மனப்பாங்கால் உடனுக்குடன் நாங்கள் அதனுடன் இயைந்து விடுவோம்.

சிறிது நேரத்தில் நாங்கள் எதிர்பார்த்த தேநீர் கடையல்லாத எதிரில் இருந்த மற்றோரு கடை திறந்தது. முதல் போனியாய் அவரிடம் தேநீர் அருந்தி விட்டு அருகருகே இருந்த காகிதங்களை தீமூட்டி கொஞ்சம் குளிர் காய்ந்துவிட்டு புறப்படலானோம்.

வால்பாறைக்கு சற்று முன்னரே இருக்கும் ஒரு டீ எஸ்டேட் எங்கள் மனம் கவர்ந்ததாதலால் அங்கு செல்வதற்காக அதன் முன்புறம் அமைந்திருக்கும் ஒரு தேநீர் விடுதியில் வண்டியை நிறுத்தினோம். கிட்டத்தட்ட காட்டு விலங்குகள் அனைத்துமே மனிதர்கள் கண்ணில் படாத அடர்த்தியான வனங்களையே வாழிடமாகக்கொண்டு அங்கு சென்று விட்டன. ஆனாலும் சுற்றுலா பயணிகளின் சுவாரசியம் குறையாமல் இருக்கவும் தங்கள் வியாபாரம் தொடர்ந்து நடக்கவும் அங்குள்ள அனைத்து கடைகளிலும் யானைகளைப் பற்றியும் மற்ற விலங்குகளைப் பற்றியும் சுவாரசியம் குறையாமல் அரத பழசான கதைகளை இன்றும் சில நாட்களுக்கு முன் நடந்த மாதிரியே கூறுகின்றனர் .

இப்பொழுது கொஞ்சம் விடிய துவங்கியதும் நாங்கள் அந்த எஸ்டேட் -ஐ  நோக்கி நகர தொடங்கினோம். அந்த செங்குத்தான வளைவுகள் மற்றும் தரமில்லாத சாலைகள் சுற்றுலா விரும்பி மற்றும் இயற்கை ஏங்கி சென்ற வாகனத்தை அவ்வளவாக பாதித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நான் சென்ற தானியங்கி வாகனத்தை நன்றாகவே பதம் பார்த்தது. கரகாட்டக்காரன் பின்னணி இசையை நானும் பாடிக்கொண்டு தொடர்ந்து முன்னேறினேன். அதன் பிறகு வண்டியை  ஒப்படைக்கும் வரை அதற்கு எதாவது ஆகிவிடுமோ என்ற பயம் இருந்தது  வாஸ்தவமே. அங்கு எங்களை எதிர்பார்த்து போலவே 2 காட்டெருமைகளை பார்த்தோம். பாவம் அவை உணவுக்காகவும் நீருக்காகவும் மிகவும் கஷ்டப்படுவது அவைகளை பார்த்தாலே புரிந்தது.

சுற்றுலா விரும்பி எப்பொழுதுமே சுற்றுலா போன்ற அதிக சந்தோஷம் தரும் சமயங்களில் மிகையான இயக்கத்திற்கு உட்பட்டே செயல்படுவர். இது ஏற்கனவே பல தருணங்களில் நான் இதை உணர்ந்திருப்பதால் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, அவரோடு வாக்குவாதம் செய்வது எனது சுற்றுலா மனநிலையை பாதிக்கும் என்பதால்.

ஆனால் பாவம் அவரோடு சென்ற இயற்கை ஏங்கி. சுற்றுலா விரும்பியின் அளவுக்கு தொழில்நுட்பம் தெரியாத அவரிடம் சுற்றுலா விரும்பியின் கைப்பேசியை கொடுத்து காணொளி எடுக்க வேண்டும், அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும், என்று தொடர்ந்து கடுப்பேற்றியவரே சென்று கொண்டிருந்தார்.  ஆனால் இயற்கை ஏங்கி எனக்கும் ஒருபடி மேல். சுற்றுலா விரும்பியின் எந்த சொல்லையும் காதில் கூட வாங்கிக்கொள்ள மாட்டார்.

சுற்றுலா விரும்பி பின்னால் வரும் என்னையும் வேகமாக வரச்சொல்லி அடிக்கடி எதோ புரியாத மொழிகளில் அவரது வாகனத்தில் சென்றவாறே திட்டிக்கொண்டிருப்பார். அந்த வாகனத்தை விரைவாக செலுத்தினால் எத்தகைய இன்னலுக்கு ஆளாக நேரிடும் என்பதை நான் அறிந்திருந்தபடியால் அது எதையும் பொருட்படுத்தாது நான் வால்பாறைக்கு எதற்கு  வந்தேனோ எனது இயற்கை எதற்காக என்னை அழைத்ததோ அதை ரசித்து கொண்டே  சென்றேன்.

எங்களை மட்டுமல்லாது அவர் ஓட்டி சென்ற வாகனத்தையும் எவ்வளவு திட்ட முடியுமோ திட்டிதீர்த்தார். அந்த  வாகனத்தை ஒப்படைக்கும் வரையிலும் அதை திட்டிக்கொண்டிருந்தவர் ஒப்படைத்தபின் அதனை புகழ துவங்கினார் பாருங்கள்!! அதை எழுத இந்த ஒரு பதிவு போதாது. அவரும் சரி நாமும் சரி,  ஒரு பொருள் நம்முடன் இருக்கும்போது அதன் அருமை தெரியாமல் அதை சபித்து கொண்டே இருக்கிறோம். அதை இழந்த பின் அதற்காக ஏங்குகிறோம்.

திடீரென்று ஒரு இடத்தில 4-5 செந்நாய்களை  கண்டோம்.பார்த்துக்கொண்டே சிறிது தொலைவு கடந்திருந்த படியால் மறுபடி அதனை காண எண்ணி வளைத்து கொண்டு வந்தோம்.  செங்குத்தான வளைவில் நான் வளைக்க முற்பட எனது வாகனம் நின்றபடியே சாய்ந்தது என்னையும் சேர்த்துக்கொண்டு. சுற்றுலா விரும்பி உடனே  இயற்கை ஏங்கியை என்னை காப்பாற்றுமாறு கூறினார். எதையுமே குறைந்தது 3 முறை கூறினால்தான்  விளங்கிக்கொள்ளும் இயற்கை ஏங்கி பின் சுதாரித்து என்னை வந்து தூக்கினார். அந்த நேரத்தில் உள்ளூர செந்நாய்கள் துரத்திவிடுமோ என்ற பயம் மூவருக்கும் இருந்தது உண்மையே.

பின்பு மீண்டும் அந்த எஸ்டேட் டின்  கடைசி வரை சென்று பார்க்க எண்ணி வாகனத்தை செலுத்தினோம். ஓரளவுக்கு மேல் அந்த சாலைகளின் வளைவுகளும், தரமும் எங்களை திரும்பி வர எத்தனித்தது. திரும்பி வரும் வழியில் நிறைய  சுயப்படங்களை எடுத்துக்கொண்டே பயணித்தோம்.  இறங்கும் வழியில் எங்களை ஒரு சரக்கு லாரி  சற்று நொடிகளுக்கு பயம் காட்டி மறைந்தது.  ஒரு வழியாக கீழறங்கி பின் மீண்டும் வால்பாறை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். வெகுவிரைவிலேயே வால்பாறை எங்களை எதிர்கொண்டது.

பச்சை பசுமையாக குளிர்ச்சியாக எப்பொழுதும் எங்களை வரவேற்கும் வால்பாறை இந்த முறை வெயில் மற்றும் மலை பொய்த்ததால் கொஞ்சம் காய்ந்து போய் எங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. வழக்கத்திற்கு மாறாக நிறைய சிற்றுன்டி அங்காடிகளும் தங்கும் விடுதிகளும் இந்த முறை பெருகி இருந்தது. வால்பாறையில் நகர்புறம் என்பது மிகவும் குறைவான பகுதி. மற்றைய அனைத்தையும் தேயிலை காடுகள் ஆக்கிரமித்து கொண்டிருக்கும். எனவே அந்த குறைவான பகுதியில் தங்குவதற்கு இடம் தேடி அலைவது எங்களுக்கு சிறுபாடாகவே இருந்தது. ஊர் சுற்றியிடம் எனக்கு மிகவும் பிடித்த செயல்களில் ஒன்று, சலிக்காமல் அசராமல் ஊர் சுற்றுவது. விடுதியின் அறைக்குள் நுழைந்த உடனே வெளியில் கிளம்பலாம் என்பவரை இவ்விடத்தில் பாராட்டியே ஆக வேண்டும். நாம் ஒரு செயலை செய்யும்போது அதற்கான ஒத்த கருத்துகள் கொண்ட மனிதர்கள் கிடைப்பது அரிதே. அப்படி அமையவில்லையென்றால் நமது நோக்கமும் ஆர்வமும் வீணாகிப் போய்விடக்கூடும். ஊர் சுற்றியும் இனியொரு முறை வேறு அவரது நண்பர்களுடன் செல்லும்போது இதனை உணர்த்து கொள்வர். எங்கள் நோக்கமே வால்பாறையில் வலம் வருவதுதானே. எனவே உடனே வெளியில் கிளம்பினோம்.

வால்பாறையில் தேயிலை தோட்டம், யானை, செந்நாய்-க்கு பிறகு எங்களுக்கு பழக்கமான ஒன்று உண்டென்றால் அது எங்கள் நண்பர் யானை காட்டியே. இப்பெயர் இவருக்கு பொருத்தமானதாகவே இருக்கும். ஒவ்வொருமுறையும் அதுவாக எங்கள் முன் வந்து நிற்கும் யானையை எங்களுக்கு அவரே மிகவும் கஷ்டபடுவதாக காட்டுவதாக அவரே நினைத்து கொள்வார், பாவம். யானை காட்டி எங்களுக்கு வால்பாறையில் தெரிந்த ஒரே முகம். முந்தைய பயணங்களில் அறிமுகம் ஆனவர், அங்கு ஒரு அரசு வேலையில் இருந்து கொண்டே வழிகாட்டியாக வாழ்க்கையை நடத்துபவர். அவரின் பல முன்செயல்களாலும் சிலபல தொல்லைகளாலும் அவரை இந்த முறை கண்டாலும் தவிர்ப்பது என்றே நினைத்திருந்தோம். ஆனால் ஊர் சுற்றி எங்களை அழைத்திருந்த தேநீர் கடையில் அழையா விருந்தாளியாக யானை காட்டி நின்றிந்தார்.

அவரை கண்டபின்பு எப்பவும் போல பழக்கத்திற்கு பலிகடாவாகும் நான் அவரையும் கூட்டிகொள்ளலாம் என்றெண்ணி, உதாசீனம் படுத்தவேண்டாம்  என்று அவரையும் எங்களுடன் அழைத்தோம். அவரும் எப்பவும்போலவே எங்களுக்காவே அங்கு காத்துக் கொண்டிருப்பதாக கூறி இணைந்து கொண்டார். ஊர் சுற்றி அவரை தன்னுடன் அமர்த்திக்கொள்ள இயற்கை ஏங்கியும் என்னுடன் வர வால்பாறை சுற்றும் படலம் தொடங்கியது. 
முதலாவதாக நீரார் அணைக்கு செல்ல முடிவெடுத்து அங்கு பயணப்பட தொடங்கினோம்.

வழக்கம்போல ஊர் சுற்றியின் வாகனம் எவ்வித பிரச்சினையும் இன்றி செல்ல நானும் இயற்கை ஏங்கியும் பயணப்பட்ட வாகனம் பல வித்தியாச ஒலிகளை எழுப்பி எங்களை அதிக வேகத்தில் செல்லாமல் தடுத்துக்கொண்டே வந்தது. தனியாக முன்பு என்னை எங்களை திட்டிக் கொண்டு வந்த ஊர் சுற்றி இம்முறை யானை காட்டியிடம் எங்களை விரைவாக வரசொல்லியும் அவர் அளவுக்கு எங்களால் திறம்பட செயல்பட முடியாதென்றும் கூறி திட்டிக் கொண்டே முன்னால் சென்று கொண்டிருந்தார். குழுவாக வந்தவர்களை மூன்றாம் நபரிடம் தவறாக பேசினால் குழுமனப்பான்மையும் குறையும், மூன்றாம் நபருக்கு எங்கள் மீதிருந்த மரியாதையும் குறையும் என்பதெல்லாம் பாவம் ஊர் சுற்றிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி பேசகூடாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல், சகோதரர் போல் பாவித்தவரை அடுத்தவரிடம் மரியாதை குறைவாக பேசிகிறோமே என்ற மனசாட்சியும் இல்லாமல், அடுத்தவரிடம் பேசி விட்டு, இல்லை இல்லை திட்டி விட்டு பின்பு அதனை இரவு உணவின்போது எங்களிடமும் கூறி சந்தோஷ பட்டு கொண்டார். வழக்கமாவே அவரிடம் ஒரு குணம் உள்ளது. பேசுவதை எல்லாம் பேசி விட்டு பின்பு அதற்கு வேறு ஒரு அர்த்தத்தை அகராதியில் இணைப்பது. நான் அவ்வாறு நினைத்து பேசவில்லை. நீங்கள் அவ்வாறு நினைத்து கொண்டீர்களா? நான் பேசியதற்கு அர்த்தத்தை நானே கூறுகிறேன் என்று இடைப்பட்ட நேரத்தில் அவர் யோசித்ததை முன்வைப்பார். அவருக்கும் அவரைப் போன்றோருக்கும் ஒரு விஷயம் புரிவதில்லை. நீங்கள் அந்த சூழ்நிலையில் அந்த கணத்தில் பேசியபோது எதிராளி என்ன உணர்ந்து கொள்கிறாரோ அதுவே நிதர்சனம். பின்பு நாம் ஆயிரம் சாக்கு போக்குகள் சொன்னாலும் அந்த வார்த்தை கொடுத்த வலியை திரும்ப பெற போவதில்லை. சரி சரி நட்பால் விளைந்த மனவலிகளை கூறவிளைந்தால் அதற்கொரு முடிவேது. நாம் நீரார் அணைக்கு செல்வோம்!

எதிர்பார்த்தது போலவே அந்த அணைக்கட்டும் காய்ந்தே கிடந்ததில் அதிக ஏமாற்றம் இல்லை. அதிக வெயிலும் மழையே இல்லாததும் மழைகாடுகளையே எந்த அளவுக்கு வாட்டியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. சிறிது நேரம் அங்கிருந்து விட்டு பின்பு அங்கு எங்களுக்கு மிகவும் பிடித்த மற்றுமொரு தனியார் தேயிலை தோட்டத்திருக்கு செல்ல முடிவெடுத்து அதனை நோக்கி விரைந்தோம். அந்த இடம் எதோ ஒரு விதத்தில் எங்களை வசிய படுத்தி வைத்திருக்கிறது என்றால் மிகையாகாது.

அந்த இடம் தரும் ஸ்பரிசம் அப்படி. அங்கு செல்லும் வழி, அங்குள்ள உயர்ந்த மலை, அடர்த்தியான பசுமையான தோற்றம் எல்லாம் ஒன்றிணைந்து எங்களை அதனுடன் ரசிகர்கள் இல்லை இல்லை பக்தர்களாகவே மாற்றியிருந்தது. அதன் உச்சிக்கு சென்று சிறிது நேரம் அதன் அழகை ரசித்து விட்டு பின்பு கீழிறங்க துவங்கினோம். வழக்கம்போல ஊர் சுற்றி விரைவாக வண்டியை செலுத்தலானார். வால்பாறைக்கு வந்ததே இயற்கையை ரசிக்கத்தானே. இதில் விரைவாக வாகனத்தை ஓட்டி என்ன பரிசா வாங்க போகிறோம்? இதை கேட்டால் அவரது வாகனத்தின் குறைந்த வேகமே அப்படித்தான் என்பர். 1000cc ஆல்டோ காரிலேயே நான் இதைவிட மெதுவான வேகத்தில் சென்றிருக்கிறேனே!? வெறும் 150cc கொண்ட அப்பாச்சி வண்டியா மெதுவாக செல்ல முடியாது?!  இதை கேட்டால் பதிலுக்கு ஆயிரம் கேள்விகளை அவர் கேட்பார். சரி அவரோடு ஏன் மறுபடி வாக்குவாதம்? வால்பாறையை நிம்மதியாக ரசிப்போம் என்ற துவக்கத்தில் எடுத்த முடிவின்படி நானும் இயற்கை ஏங்கியும் பின்னால் வர ஊர் சுற்றியும் யானை காட்டியும் முன்னால் சென்று வெற்றி கோப்பையை கைப்பற்ற விரைந்துக் கொண்டிருந்தனர்.

என்னுடன் இயற்கை ஏங்கி பொதுவாகவே தூரபார்வை உள்ளவர். எப்பவும் எங்களுக்கு தெரியாத பல நுணுக்கமான  விஷயங்களை அவர் எப்படியோ கண்டுகொள்வார். அங்கும் அவர் எதோ நகர்வது போல உள்ளது என்று என்னிடம் காட்ட நானும் 2-3 நிமிடங்கள் உற்று கவனித்ததில் அந்த நகர்வு யானையாக மாறியிருந்தது. முன்னால் சென்ற ஊர் சுற்றியையும் காணோம். சரி சிறிது நேரம் நின்று யானையை புகைப்படங்கள் எடுக்கலாம் என்று அங்கேயே நின்று கொண்டும், ரசித்து கொண்டும் இருந்தோம். வழியாக வந்த பல வாகனங்கள் அங்கு நின்று யானையை ரசிக்க தொடங்கினர். ஆனால் நமது ஊர் சுற்றி இன்னமும் திரும்பி வரவில்லையே என்றெண்ணி நாங்கள் செல்ல தொடங்கினோம்.

ஊர் சுற்றி ஒரு இடத்தில் நின்று காட்டு எருமையுடன் சுயப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். நாங்கள் சென்று யானையை கண்டதாக கூறியவுடன் அதெல்லாம் கண்டிப்பாக யானையாக இருக்காது, வெறும் கல்தான் தானும் அதனை கவனித்தேன் என்று கூறி மறுதலித்தார். ஏன் அவருக்கு அவ்வளவு நம்பிக்கைஇல்லாத்தனம் என்மேல் வந்ததோ யாமறியேன்?! பின்பு அவருக்கு நான் எடுத்த புகைப்படங்களை காட்டியவுடன் “நான் அப்போதே நினைத்தேன் யானை என்று. யானை காட்டிதான் அதை யானை இல்லை வெறும் கல் என்றார்” எனக்கூறி யானை காட்டியை பலியிட்டார். வாகனம் ஒட்டியது இவர், வால்பாறைக்கு சுற்றுலா வந்திருப்பது இவர், அந்த அக்கறை கொஞ்சமேனும் இருந்திருந்தால் இவர் நின்று கவனித்திருக்கலாமே?! – தான் சற்று முன் பேசிய வார்த்தைகளை தானே உடனுக்குடன் மாற்றி பேசுவதால் தனக்குள்ள மரியாதை தன்மேல் உள்ள நம்பிக்கை கெட்டுவிடும் என்று கூட அறியாதவரா ஊர் சுற்றி?! - யானை காட்டி பாவம். எதுவுமே கூறமுடியாமல் நின்றிந்தார். பின்பு மீண்டும் நாங்கள் அந்த யானை பார்த்த இடத்திற்கு விரைந்தோம். அந்த யானை பாவம், அங்கேயே நின்று காய்ந்து போன சில மரங்களை சரித்து உணவாக்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அதை கண்டு விட்டு என் புகைப்பட கருவிக்குள் சுருட்டி கொண்டு பின்பு நகர்புறத்திற்கு திரும்பினோம்.

அங்கு எங்களின் விருப்பக்கடையில் தேநீர் அருந்தி விட்டு யானை காட்டியை அவரின் வீட்டுக்கு சென்று விடலாம் என்று ஆலோசித்து மறுபடியும் வாகனத்தை இயக்கினோம். அவரின் வீட்டுக்கு செல்லும் பாதையில்  அவ்வளவு  குளிர். அப்பாடா! வால்பாறைக்கு வந்தது வீணாகவில்லை!! சில ஒத்தையடி பாதைகளையும் கடும்குளிரையும் தாண்டி யானை காட்டியின் வீட்டுக்கு வந்தடைதோம். சொல்லி வைத்தார் போல அங்கு எப்பொழுதும் கிடைக்கும் வரவேற்பு அன்றும் கிடைத்தது. அன்பான அழகான குடும்பத்தை பெற யானை காட்டி உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அங்கு அவரை விட்டு விட்டு அடுத்த அதிகாலை கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு செல்வதை ஆலோசித்துவிட்டு நாங்கள் தங்கிருந்த விடுதி நோக்கி விரையலாணோம்.

மறுநாள் அதிகாலை எழுந்து கிளம்பி யானை காட்டியின் வீட்டருகே உள்ள ஒரு இடத்திற்கு வாகனத்தை கிளப்பினோம். கடுமையான குளிர் வாகனத்தில் கையைகூட வைக்க முடியாத அளவுக்கு விரைக்க செய்தது. ஊர் சுற்றி செயற்கை தீமூட்டியை வைத்து தீ மூட்டினார். அந்த குளிருக்கு அதில் கையை வாட்டியது அவ்வளவு இதமாக இருந்தது. சிறிது நேர காத்திருப்புக்கு பின்பு யானை காட்டி அங்கு வந்து சேர்ந்தார். சூடாக ஒரு தேநீர் அருந்திவிட்டு அதிரப்பள்ளியை நோக்கலாணோம். 

இந்தமுறை யானை காட்டி காட்டிய வழி உண்மையிலேயே மிகப்பிரமாதமாக இருந்தது. வழி எங்கும் அடர்த்தி குறைவில்லா காடுகளும் அதிகாலை சூரியனும் எங்கள் பயணத்தை உற்சாகப்படுத்தியது.
வழியில் ஏதேனும் மிருகம் தட்டுப்படலாம் என்றெண்ணி வாகனத்தை இயற்கை ஏங்கியை ஓட்டச் செய்துவிட்டு நான் பின்னால் புகைப்பட கருவியுடன் பயணப்பட துவங்கினோம். வழியில் சிகப்பு மஞ்சன் பச்சை நிறங்களில் விதவிதமான பறவைகளை நான் புகைப்படம் எடுக்க முயற்சித்து சில பறவைகளை மட்டும் புகைப்பட கருவிக்குள் பிடித்துகொண்டேன். அந்த பறவைகளின் வேகம் அப்படி. எங்கள் முன்னால் செல்லும் ஊர் சுற்றி, என்னுடன் இருக்கும் இயற்கை ஏங்கி இருவரும் நான் எடுத்த பறவைகளையே மிருகங்களையே மீண்டும் எடுப்பதாக எண்ணி சலித்து கொள்வதுமே என்னை அதிக படங்கள் எடுக்கவிடாமல் தடுத்தது. அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, ஒவ்வொரு புகைப்படத்திலும் நான் காட்சிபடுத்த நினைக்கும் தருணங்கள் என்னவென்று. எனக்கு ஓரளவு தெரியும் புகைப்பட கலையையும், கொஞ்சம் (அதிகமாக) தெரியும் வாகனங்களை பற்றிய அறிவையும் அதிகமாக அங்கீகரிப்பவர் ஊர் சுற்றியே. அவரே இன்று இவ்வாறு மாறி போனதில், எனக்கு அதிக ஏமாற்றமில்லை – பழகியவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு கணம் இதை என் வாழ்வில் செய்திருப்பதால்!

இதுவரை இவ்வாறு ஒரு ஏமாற்றத்தை தராத ஒரே நண்பன் என்றால் அது என் உற்ற தோழன் சென்னை மக்களால் M.K.ராஜ் என்று அன்புடன் அழைக்கப்படும் காளிராஜ் மட்டுமே. அடிக்கடி ஏமாற்றத்தை தந்தாலும் கோபப்படுத்தி பார்த்தாலும் அடுத்த கணம் உணர்ந்து கொள்ளும் குமார் கூட எனக்கு ஒரு உற்ற தோழனே. என்னடா இவன் இதுவரை யார் பெயரையுமே சொல்லாமல் குறிப்பு பெயரால் மட்டுமே சொல்லிவிட்டு இங்கு மட்டும் பெயர் சொல்லுகிறானே என்று  நினைக்கிறீர்களா? இவர்கள் இருவரும் நான் உண்மை பெயரோடு, திட்டினால் கூட அதற்காக என்னிடம் வருத்த காட்ட மாட்டார்கள். என்னுடனான பழக்கத்தை தவிர்த்து கொள்ள நினைக்கமாட்டார்கள், முக்கியமாக whatsapp க்ரூப்பில் இருந்து விலக கொள்ள மாட்டார்கள்.

சிறிது நேர பயணத்தில், பராமரிப்பு நடைபெறும் ஒரு பாதையை அடைந்தோம். அங்கு நின்றிருந்த மக்கள், வன பாதுகாவலர்கள் எங்களை நோக்கி எதோ ஒலி எழுப்பவே நானும் இயற்கை ஏங்கியும் என்னவென்று விசாரித்ததில் யானைகள் அங்கு கூட்டமாக இருப்பதாக கூறி எங்களை காண செய்தனர். முன்னால் சென்ற ஊர் சுற்றியை நாங்கள் கத்தி அழைக்க அழைக்க அவரோ எதையுமோ கேளாதவராய் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து திரும்ப வந்தார். யானை இருப்பதை சொல்லவும் பாவம் யானை காட்டி மறுபடி பலிகடாவானார். அங்கு ஒரு யானை குடும்பத்தையே ஒருமித்து பார்த்ததில்  மகிழ்ச்சியே.

இயற்கையை ரசித்தவாரே பயணப்பட்டதில் பயண தொலைவே தெரியவில்லை. கேரளா எல்லையின் மிக அருகில் யானை காட்டியின் மலையாள மொழி புலமையால் மலையாளிகள் வைத்திருந்த உணவங்காடியில் கேரளா சிற்றுன்டியை முடித்து விட்டு செக்போஸ்ட்டில் காவலர்கள் கேட்ட ஆவணங்களை காண்பித்து விட்டு அதிரப்பள்ளியை நோக்கிய எங்கள் ஆனந்தபயணம் ஆரம்பமானது.

அதிரப்பள்ளியை நோக்கிய சாலக்குடி வனசரகம் மிக நீண்ட வனவழியை கொண்டது. அப்பாடா கொஞ்சம் நிம்மதி! ஊர் சுற்றி எங்களுக்கு முன்னால் மெதுவாகவே சென்று கொண்டிரிந்தார். பயணம் முழுக்கவே நான் ஊர் சுற்றியை பற்றி கொஞ்சம் அதிகமாவே திட்டி கொண்டிருப்பதாக நீங்கள் உணர்ந்திருக்கலாம். அதற்கு காரணம் அவர் மேல் நான் கொண்டிருந்த நம்பிக்கை, நட்பு. இவர் இப்படி செய்கிறாரே என்கிற ஆதங்கம். ஆனால் ஊர் சுற்றி இப்படி நடந்து கொண்டதில் ஒரே ஒரு மகிழ்ச்சி. எத்துனை நெருங்கின நட்பென்றாலும் ஒரு அளவுக்கு மேல் நம்மில் அதிகப்படியான உரிமையை தரும்போது நம் மரியாதை எந்த அளவுக்கு அவரிடத்தில் குறையும் என்பதை ஆணிதரமாக கற்றுக்கொடுத்து என்னை பக்குவப்படுத்தி இருக்கிறார் ஊர் சுற்றி. நன்றி சகோதரரே!


சரி கதைக்கு வருவோம். சாலக்குடி வனம் எப்பவும்போலவே எங்களை வசப்படுத்தி இருந்தது. வழியில் யானை, சிறுத்தை, புலி என்று எதையாவது கண்டுவிட மாட்டோமா என்றே ஆசையை பறக்கும் அணில், சில பறவைகள் என சிற்சில உயிரினங்கள்  சற்றே பலமாக்கி கொண்டிருந்தன. ஆனால் எதிர்பார்த்த எதையும் இம்முறை நாங்கள் காணவில்லை. மான்களை கூட வெகு அரிதாகவே காண முடிந்தது. பாவம் யானைகள் தண்ணீர் தேடி வாழிடம் மாறி வெகுவாக பாதிக்கபட்டிருந்தன. தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக கேரளவாக மாறும் அந்த பச்சை காடுகள் நம்மில் பசுமையை வாழ்நாள் முழுமைக்கும் விதைத்திருக்கும் என்றால் மிகையாகாது.



சில இடங்களில் யானைகள் வழிதடங்களை மட்டுமே கண்டவாறு சென்றபோது முதலைகள் அதிக உலாவுவதாக கேரளா அரசால் எச்சரிக்கைப்பட்ட ஒரு ஏரியை அடைந்தோம். என்னுடன் வந்த இயற்கை ஏங்கிக்கு ஒரு பழக்கம். தண்ணீர் கண்டால் கால் நனைக்காமல் வர மாட்டார். எவ்ளோ சொல்லியும் வண்டியில் இருந்து இறங்கி அந்த ஏரியை நோக்கி விரைந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டு நிற்க, முன்னால் சென்ற ஊர் சுற்றி என்னிடம் வந்து ‘அவரை ஏன் இறங்க அனுமதித்தீர்கள்? பயணத்திற்கு தலைமை ஏற்ற நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று பாலு தேவரை கன்னத்தில் அறையும் கேள்விக்களை போல பல கேள்வி கணைகளை தொடுத்தார். இதே ஊர் சுற்றியிடம் சென்ற முறை வால்பாறைக்கு வந்தபோது இரவில் தேயிலை தோட்டத்தை ஒட்டி அமர வேண்டாம் என்றபோது அதை மறுத்து பலவாறாக என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு அதனை வேறொரு தருணத்தில் முன்னெடுத்தபோது நான் தானே தலைமை எனவே நான் சொல்வதை கேக்க வேண்டும் என்றபோது தலைவராக நீங்களே நினைத்து கொண்டால் எப்படி நாங்கள் அவ்வாறு நினைக்க வில்லையே என்றார். இப்போது மட்டும் ஏன் தலைமை எனக்கூறி என்மேல் பழிபோட பார்க்கிறார் என புரியாமல் நின்றிந்த போதே இயற்கை ஏங்கி எங்களை நெருங்கினார். பின்பு சிறிது நேரத்தில் அதிரப்பள்ளி அருவியை அடைந்தோம்.
சுற்றுலா வந்திருந்த மிக அழகான கேரளா, கர்நாடகா பெண்களோடு  அதிரப்பள்ளி கொஞ்சம் எங்களை அதிரவே வைத்தது. கொஞ்சமாய் அருவியின் அடையாளத்தோடு இருந்த அதிரப்பள்ளியை எங்கள் கண்கள் மற்றும் புகைப்பட கருவிக்குள் கொஞ்சமாய் ரசித்து விட்டு அருகே இருந்த கேரளா உணவகத்தில் மதிய உணவை முடித்து வால்பாறை நோக்கி திரும்பலாணோம்.

சூரியன் மறையும் பொழுது வெகு அருகிலேயே உள்ளதால் 2 மணி நேரத்தில் வால்பாறை அடைய வேண்டும் என்ற கேரளா வனத்துறையின் அறிவிப்பு படி விரைவாக திரும்பி கொண்டிருந்தோம்.  இயற்கை ஏங்கி வரும் வழியில் என்னையும் வண்டியையும் சேர்த்து கீழே தள்ளி விட்டு அவர் மட்டும் பலமாக அடிபட்டு கொண்டார். இத்துணை களேபரத்திலும் நம் ஊர் சுற்றி நாங்கள் விரைவாக வரவில்லை என வருத்தபட்டு கொண்டே சென்றுகொண்டிருந்தார். அவருக்கு எப்படி தெரியும் நாங்களே வண்டியிலிருந்து விழுந்து தவழ்ந்து கொண்டிருப்பது.

செல்லும் வழியில் திடிரென ஊர் சுற்றி வண்டியை நிறுத்தி விட்டு எரிபொருள் மிக குறைவாக இருப்பதாக கூறினார். வால்பாறை எல்லையை நெருங்கி இருந்தாலும் நகர்புறம் வரும்வரை எரிபொருள் போதுமா என ஐயப்பாடு இருக்கவே எல்லைக்கு மிக அருகிலேயே ஒரு கடையில் எரிபொருள் விற்பதாக யானை காட்டி கூறினார். சரி அங்கு விரைவோம் என முன்னேறினோம். இயற்கை ஏங்கி ஊர் சுற்றியிடம் கொடுத்த கைக்குட்டையை கேட்டுகொண்டே வர வெறுப்பாகி போன ஊர் சுற்றி  எரிபொருள் விற்கும் கடைக்கு மிக அருகில் திடிரென ஊர் சுற்றி எங்கள் அருகே வந்து அவரது வண்டியில் இருந்தபடி உங்களுடன் இனி எங்குமே வர கூடாது என்றார். இதை நாங்கள் அல்லவா அவரிடம் சொல்ல வேண்டும்?! எப்போதும் போல அவரின் பேச்சை கவனிக்காது போல அமைதியாக இருந்து விட்டோம். பின்பு அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு அடுத்த இடம் நோக்கி விரைந்தோம். அது நல்லமுடி பூஞ்சோலை. விரைவாக அங்கு சென்றும் மாலை நேரம் ஆனதால் எங்களை அனுமதிக்கவில்லை. சரி நாளை பார்த்துக்கொள்ளலாம் என்றெண்ணி திரும்பினோம்.

மறுநாள் ஊருக்கு திரும்ப வேண்டியிருந்ததால் அதிகாலை சீக்கரமே கிளம்பி நல்லமுடி பூஞ்சோலை விரைந்தோம். ஆனால் அங்கு எப்பவும்போல எங்கள் அதிர்ஷ்டம் எங்களுக்கு முன்னால் சென்றிருந்தது. அன்றும் யானை ஒன்று உள்ளே புகுந்திருந்திததால் அனுமதி மறுக்கப்பட்டது. சரி அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என அங்கிருந்து கிளம்பினோம். சாரி வால்பாறையிலுருந்து கிளம்பினோம். முந்தைய நாள் இயற்கை ஏங்கியின் ஓட்டுனர் திறமை தெரிந்திருந்தபடியால் இன்றைய மலை இறக்கத்தை அவரிடம் ஒப்படைத்தால் கீழே இறங்குவதற்குள் என்னை மலை ஏற்றிவிடுவார் என்பதால் நானே வாகனத்தை வாங்கி ஓட்டினேன். கீழே இறங்கும் வழியில் எப்பவும் வெள்ளமாய் வழியும் அருவிகள் இம்முறை காய்ந்து போயிருந்தது சற்றே கவலையை உண்டு பண்ணியது. நம் தலைமுறைக்கே இந்த கதி என்றால் வருங்கால தலைமுறை என்ன செய்ய போகிறதோ? என்ற அச்சம் பரவியது.

அங்கிருந்து அப்படியே மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று சாமியை கும்பிட்டுவிட்டு அப்படியே கொஞ்சம் கொங்கு நாட்டு அழகையும்  ரசித்துவிட்டு வாகனங்களை ஒப்படைக்க கோயம்புத்தூர் நோக்கி விரைந்தோம். பொள்ளாச்சியிலுருந்து கோயம்புத்தூர் வரையுலும் அதற்கு பின்பும் இயற்கை ஏங்கியே வண்டியை செலுத்தினார். நான் நினைத்ததிற்கு எதிர்மறையாக நன்றாகவே ஓட்டினார். கோயம்புத்தூர் நெருங்கி வாகனங்களை ஒப்படைக்கவேண்டிய இடத்தை நோக்கி பயணப்பட்டோம். 

பொள்ளாச்சி, கோயம்புத்தூர்  வாசிகள் என்றால் வாகனங்களை அதிகம் நேசிப்பவர்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அது அனைத்தையும் கோயம்புத்தூர்காரர்கள் தவிடுபோடி ஆக்கிருந்தனர். சாலை விதிமுறைகளை பற்றியோ சக வாகன ஓட்டிகளை பற்றியோ எதையும் கவலை படாமல் தாறுமாறாக ஓட்டி எரிச்சல் ஏற்படுத்தினாலும் கொங்கு நாட்டு மகளிரும் கேரளா நாட்டிளம் பெண்களும் சற்றே ஆசுவாசப் படுத்தினர். ஊர் சுற்றியும் இயற்கை ஏங்கியும் வண்டி ஓட்ட நான் கோயம்புத்தூர் அழகை ரசித்து கொண்டே வந்தேன். இது இருவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியதாக இருவரும் ஒருமித்த குரலில் சொன்னபோது இதுநாள் வரை இருவரையும் உட்கார வைத்து நான் மட்டுமே கார் ஓட்டியது ஞாபகத்தில் வந்து போனது. நன்றி கெட்ட உலகம்!

வாகனங்களை ஒப்படைத்து விட்டு திருச்சி திரும்பிபோது எனக்குள் பலவித முடிவுகளும் சில நட்பின் ஏமாற்றங்களும் ஒரு ஞானியின் மனநிலைக்கு என்னை மாற்றியிருந்தது.

ஊர் சுற்றி, இயற்கை ஏங்கி பற்றி இவ்ளோ சொன்னீர்கள். தங்களை பற்றி ஒண்ணுமே சொல்லவில்லை என்கீர்களா? எனக்குள்ளும் நிறைய கெட்ட விஷயங்கள் உண்டு. எல்லாரையும் நண்பர் என்று நம்பி விடுவது, பழகியவர்களை பலமுறை சகித்து கொள்வது என்று. இனி இதுபோன்ற கெட்டவைகள் எனக்குள் இருக்காது என நம்புகிறேன். பார்ப்போம்.

இனியொரு பயணத்தியில் இனிமையான தருணத்தில் மறுபடியும் சந்திப்போம்.

2 comments:

  1. உங்கள் பதிவு தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது...அண்ணா.

    ReplyDelete

 

Popular Posts